Ashrafa Noordeen is with R.M. Nowsaath.
முத்திரையிடப்பட்ட மது
"உயிருள்ள வரை குர்ஆனுக்குக் கட்டுப்பட்டவன் நான் .தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தமர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பாதையின் பணிவான தூசி நான்.
இதற்கு வேறாய் என் கவியை யாரேனும் விளங்கினால் அவனை விட்டும் விலகுகிறேன். அவன் சொல்லின் மீதும் வெறுப்பானேன் ".
தத்துவ ஞானியும் இறைநேசருமான மெளலானா ரூமியின் சொல்லை தன் அகவாக்கியமாகக் கொள்ளும் சிறந்த எழுத்தாளரான ஆர்.எம்.நெளஷாத்தின் "முத்திரையிடப்பட்ட மது" கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகளைப் பற்றிய எனது சிறு கருத்துக்களை முன் வைக்க ஆவலுற்றேன்.
அனேகர் இறைவனைப்பற்றியும் அவனது மகத்துவங்கள் பற்றியும் அவனது தூதர்கள் பற்றியும் மார்க்க நெறிகள் பற்றியும் எழுதுவதில் இருந்து விலகி இருக்கிறோம்.
இறைகாதலுற்று சூபிசத்திற்குள் தன்னைக் காணாமல் ஆக்கும் ஞானிகளின் உயரத்தை எட்டாத போதும், அதன்தொடக்கப்புள்ளிக்குள்
ஒரு துரும்பாய் ஆவதும் பெருமையே.
இதனை வெவ்வேறு தலைப்புகளில் நிதானமாக உணர்த்துகின்றது "முத்திரையிடப்பட்ட மது "
தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள் . இலகு மொழிநடையையும் கருவுக்கு ஏற்றாற் போலுள்ளதுமான மென்மையான இசையாய் ஒலிக்கின்ற ஓசையையும் கொண்டுள்ளது. வாசகருக்கு சிரமத்தை ஏற்படுத்தாது மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது.
காலாதி காலம் ,காலமான காலம்,காலமானி, மாயச்சுழல் ,முக்காலமுணர் போன்ற கவிதைகள் காலத்தை உணர்த்துகிறது.
"காலத்தை திட்ட வேண்டாம்
நானே காலமாக இருக்கிறேன். "
என்ற வரிகள் காலம் கணக்கின்றி உள்ளது என்பதன் பிரதிபலிப்பாகவும், திருமறையில் இறைவன் "காலத்தின் மீது சத்தியமாக
மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் "எனும்
திருவசனத்தை மெய்ப்படுத்துவதாகவும் உள்ளது. பல கவிதைகளுக்கு நீண்ட விமர்சனம் தேவை எனினும், அது முகநூலில் முடியாதது.
இதுபோல் வாழ்வு,மரணம், அச்சம், தலையெழுத்து,நபிமார்களின் செய்தி...
இவைகளை உண்மைக்கு மாற்றமின்றி கற்பனை கலவாது எழுதப்பட்டிருப்பது
மத சார்பான ஆரோக்கியத்தை வாசகருக்குத் தருகிறது .
"முத்திரையிடப்பட்ட மது" இறுதித்தூதரின்
மீது மனிதன் கொண்ட தாளா அன்பின் வெளிப்பாடாக உள்ளது.
"சுமைகள் "மூலம் பொய்,புறம்,புளுகு,விபச்சாரம்,தற்பெருமை,
போன்ற பல துயரச் சுமைகள் அழுத்துகிற ஒருவனின் பாவச்சுமைகள் பட்டியலாய் நீள்கிறது. எனினும் மறுமையில் ஒருவரின் சுமையை இன்னொருவர் தூக்க முடியாத
நிலை வரும். அதற்காக இப்போது மனிதன் தன் பாவம் உணர்தல் வேண்டும் என்பது கவிதையின் அடிநாதமாக உள்ளது.
"தீரா வேட்கை" யின் சில வரிகள்
தூர்ஷீனா மலையேறி
தூக்கமின்றி
நாற்பது இரவு
நடு இருப்பில் நானிருக்கவோ....
அடர்வனம் நடுவே
இடர்தரு பிராணிகளின்
இம்சை பொறுத்து
ருக்கூஹ் செய்தவாறே
ரூஹை விடவோ.....
என்ன செய்தால்
எனக்கருள்வாய் இறைவா.....?
வாசிப்பவரை இறைவன் பால் நகர்த்தும்
சிறப்பான கவிதை.
இதுபோன்ற பல கவிதைகள் மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான கவிதைகள் இஸ்லாமிய வரலாறுகளையும், மரணத்தின் பின்னரான
அதற்கு முன்னரான வாழ்வு நெறிகளையும், சுய பச்சாத்தாபத்தையும், தன்னகத்தே கொண்டுள்ளது. 91 கவிதைகளும் இதே நோக்குடன் இருந்திருப்பின் முழுமை பெற்ற
தொகுதியாய் இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான தனிப்பட்ட கருத்து. காரணம் இந்த தொகுதியிலுள்ள சில கவிதைகள்
நூலுக்குப் பொருத்தமற்றதாய் உள்ளது.
முற்றிலும் இஸ்லாத்துடன் அதனுடன் தொடர்பு பட்ட நிகழ்வுகளுடன் எல்லாமும் இருந்திருக்க வேண்டுமே என்று நினைக்கத் தோன்றியது. நூலின் தலைப்பு நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரையான நபிகளாரைப்பற்றியது .
அது நூல் முழுவதுமாக மணத்திருக்க வேண்டும்.
அவ்வாறிருக்க
உ+ம்: தங்க மாளிகை நீ, இச்சா...,ஒரத்த பெருமஹா நொக்கு......
இப்படி ஒரு சில ......சேர்க்கப்படாதிருந்திருக்கலாமோ?
மொத்தத்தில் பயனுடைய ஓர் தொகுதியாக
உள்ளது. கருத்தைக் கவிதைகளுக்குள் தேடித்திரிந்து ஒழித்து விளையாடும் படிமங்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
.
"நாளைக்குப் பெருநாள் "கவிதை 73ம் மற்றும் 109ம் பக்கங்களிலும் தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
நூலைப் பெற விரும்புவோர்
0774781250 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்க. விலை :500/=
.
2022.07.17
"
No comments:
Post a Comment